நாட்டில் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இது முக்கிய நாள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நம் நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு வயது அடிப்படையில் படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. கோர்பிவேக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த‘பயலாஜிகல்-இ’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை 28 நாள் இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு தடுப்பூசி முகாம்களில் மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளிலும் இதனை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவில் கூறியிருப்பதாவது:
நமது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாள். இப்போது முதல், 12-14 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதி பெறுகின்றனர். மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு (பூஸ்டர் டோஸ்) தகுதி பெறுகின்றனர். இந்த வயதினரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
நமது குடிமக்களை பாதுகாக்கவும் கரோனா தொற்றுக்கு எதிரான போரை வலுப்படுத்தவும் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிக்கான பணிகளை நாம் தொடங்கினோம்.
நமது விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் தனியார் துறையினரும் எழுச்சியுடன் செயல்பட்டதுபாராட்டுக்குரியது. 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில், நமது மூன்று தடுப்பூசி உற்பத்திக்கூடங்களை நான் பார்வையிட்டேன். நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளை கேட்டறிந்தேன். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்திற்கு மாநில அரசுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி.
தடுப்பூசி ஏற்றுமதி
ஒட்டுமொத்த உலகையும் காக்க வேண்டும் என்ற இந்தியாவின் நெறிமுறைக்கு ஏற்ப, தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தோம்.
கரோனா தொற்றுக்கு எதிராகஉலகளாவிய போரை, நமதுதடுப்பூசி முயற்சிகள் வலிமைப்படுத்தியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான நிலையில் நாம் இருக்கிறோம்.
அதேநேரத்தில், கரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் ஆய்வு
உத்தரபிரதேசத்தில் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனை ஒன்றுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் சென்று அப்பணியை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உத்தரபிரதேசத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. மிகஅதிக எண்ணிக்கையில் தடுப்பூசிசெலுத்தியுள்ளோம். நான்காவது அலை தொடர்பாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
– பிடிஐ