சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 12 முதல் 14 வரையிலானசிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ்தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 12முதல் 14 வயதுடைய 21 லட்சத்து 21,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தப் பின்னர் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.
மருத்துவத் துறையில் காலி பணியிடங்களை கண்டறிந்து, மார்ச் 31-ம் தேதிக்குப்பின் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலகட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, எதிர்காலத்தில் முன்னு ரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் ” என்றார்.