25 வருஷம் கலக்கணும்.. பிரதமர் மோடி போடும் அதிரடி பிளான்.. உற்சாகத்தில் பாஜக!

இன்னும் 25 வருஷத்துக்கு நம்மை யாரும் அசைச்சுப் பார்க்கக் கூடாது. அந்த வகையில் நமது செயல்பாடுகள் தெளிவாக இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடி,
பாஜக
உயர் மட்டத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ற வகையில்
பிரதமர் நரேந்திர மோடி
திட்டம் வகுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது பாஜக. அரசுக்கு எதிரான பல்வேறு அதிருப்திகள் அலையாக வீசினாலும் கூட ஏற்கனவே ஆட்சி புரிந்த நான்கு மாநிலங்களையும் பாஜக அழகாக தக்க வைத்து விட்டது.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக மிகப் பெரும் அதிருப்தி அலை வீசியது. எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டன. ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வரிசை கட்டி நின்றன. ஆனால் யோகி ஆதித்யநாத் அத்தனையையும் தாண்டி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர்
நரேந்திர மோடி
ஏகப்பட்ட எதிர்காலத் திட்டங்களுடன் கவனமாக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள நான்கு மாநிலங்களிலும் அமைச்சர் பதவிக்கு வரப் போகிறவர்களை சரியான முறையில் தேர்வு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களின் முழு விவரங்களையும் பாஜக தலைமை சேகரித்து வருகிறதாம்.

அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடியுடன், பாஜக மூத்த தலைவர்கள் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளனராம். அமைச்சர்கள் நியமனத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு பிரதமர் மோடி தலைவர்களை

அறிவுறுத்தியுள்ளாராம்.

அனைத்து ஜாதியினருக்கும் அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளாராம். அதேபோல இளைஞர்கள், பெண்கள், கற்றறிந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவும் அவர் உத்தரவிட்டுள்ளாராம். “அடுத்த 25 ஆண்டுகள் நமது கட்சி சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். அதற்கு இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் கொடுக்க வேண்டியது அவசியம்” என்று பிரதமர் கூறியுள்ளாராம்.

இதுதவிர இன்னும் சில மெகா பிளான்களை பிரதமர் மோடி களம் இறக்கியுள்ளாராம். அதாவது பாஜக எம்.பிக்கள், தங்களது தொகுதியில் சரிவர கட்சிக்கு ஆதரவு கிடைக்காத 100 வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம். ஏன் அந்த வாக்குச் சாவடிகளில் நமக்கு வாக்குகள் வரவில்லை, அதற்கு என்ன தீர்வு என்று கண்டறியவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம். இதை வைத்து அந்த வாக்குச் சாவடிகளில் கட்சியின் வளர்ச்சிக்குத் திட்டமிட பாஜக முடிவு செய்துள்ளதாம்.

இதற்கிடையே, யோகி ஆதித்யநாத்தின் 2வது அத்தியாயத்தை சிறப்பானதாக மாற்ற கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாம். இதனால், அமைச்சர்களை பார்த்து பார்த்து கவனமாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். 20 புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பழைய அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

வழக்கமாக ஜாதவ் சமுதாய மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் பெருமளவில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். எனவே அந்த சமுதாயத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் தர பாஜக திட்டமிட்டுள்ளதாம். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்வதேந்திர தேவ் சிங் துணை முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.