புதுடில்லி, மார்ச் 18-
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., பெங்களூரில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ஏழு மாடி கட்டடத்தை, 45 நாட்களில் கட்டி முடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த கட்டடத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். கர்நாடக மாநிலம் பெங்களுரில், விமான மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பணிகளுக்காக, ஏழு மாடி கட்ட டம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.இவ்விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கடந்த, 2021ல் இந்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும், பிப்.,1ல் தான், கட்டுமானப் பணிகள் துவங்கின.இதையடுத்து விறுவிறுவென பணிகள் நடந்து, 45 நாட்களில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பை, சென்னை மற்றும் ரூர்கி தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கி தந்துள்ளன. இந்த கட்டடம், ஏற்கனவே தயாரித்த பாகங்களை வைத்து, கலப்பு கட்டுமான தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.இதில், ஏ.டி.இ., எனப்படும் ஐந்தாம் தலைமுறை நவீன நடுத்தர போர் விமானங்கள், விமான கட்டுப்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஏழு மாடி கட்டடம், 45 நாட்களில் கட்டப்பட்டுள்ளதாக, டி.ஆர்.டி.ஓ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement