புதுடெல்லி: நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இதுவரை ரூ.39,580 கோடி கடன் வழங்கியுள்ளன. இத்தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிசான் ராவ் காரத் தெரிவித்தார்.
இந்த கடன் அனைத்தும் psbloanin59minutes.com இணையதளம் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டவையாகும்.
இந்த திட்டமானது 2018-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2022 பிப்ரவரி வரையான காலத்தில் 2,01,863 கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட நிதி ரூ.39,580 கோடியாகும். இவை அனைத்தும் வர்த்தக பிரிவு கடன் ஒதுக்கீடாகும். இதில் ரூ.1,689 கோடி கடன் சில்லரை கடன் உதவிக்கான ஒதுக்கீடாகும். இணையதளம் மூலம் விரைவாக கடன் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரரின் மனு பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வங்கிகளின் கிளைகள் முடிவு செய்து கடன் பரிசீலனை மையங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இந்த கடன் வசதி திட்டமானது பிறஇணையதளங்களான பைசா பஜார். காம், கிரெட்அவென்யூ, டிரேட் ரிசீவபிள்ஸ் டிஸ்கவுன்டிங் சிஸ்டம் உள்ளிட்டஇணையதளங்களுடன் இணைக்கப்பட்டு அதன் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும் கடன் ஒப்புதலை சம்பந்தப்பட்ட வங்கி நிர் வாகம்தான் முடிவு செய்தது என அமைச்சர் கூறினார்.
– பிடிஐ