9 வருட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கிய மியூசிக் ஆல்பம் வெளியீடு- ரஜினி பகிர்ந்த ட்வீட்

தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி பாடல் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர், தனது கணவர் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை வைத்து, ‘3’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா, இசையமைப்பாளராக அனிருத்தையும் அறிமுகப்படுத்தினார்.

image

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வந்தார். இதற்காக அண்மையில் ஐதராபாத் சென்றார்.

இந்தப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியிருந்தனர். இந்நிலையில், இந்த மியூசிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தை தமிழில் நடிகரும், ஐஸ்வர்யாவின் தந்தையுமான ரஜினிகாந்த் வெளியிட்டார்.

image

பாடலை வெளிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது, “9 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் எனது மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ‘பயணி’ இசை வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுதும் நீ சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடலை தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 4 மொழிகளிலும் அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்து, நடித்துள்ளார். மேலும் சிரஞ்சீவி, ராணா, துல்கர் சல்மான், குஷ்பு, யுவன் ஷங்கர் ராஜா, சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், மேனகா சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.