பணப் பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழி செயலாக்கும் பிரபல நிறுவனம் பே டிஎம். இக்கட்டண வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்துள்ளது நாட்டின் முக்கிய நிதிநிலைகளைப் பராமரிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி. இதுதான் கடந்த மூன்று நாள்களாகப் பேசுபொருளாக இருக்கிறது.
வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல் மற்றும் தனியுரிமை விதிகள் மீறல், சீன நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் தரவுகளை லீக் செய்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. சந்தேகத்திற்கு மேலும் இடம் வகுக்கும் விதத்தில் பே டிஎம் நிறுவனத்தின் அதிக பங்குதாரர்களில் ஒருவராக சீன நிறுவனமான அலிபாபாவும் இருக்கிறது.
ஆகஸ்ட் 2016-ல் நிறுவப்பட்ட பே டிஎம் கட்டண வங்கியானது (PayTM Payments Bank) மே 2017-ல் நொய்டாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 6.4 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ஆர்.பி.ஐ-யின் தடைக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல. மே மாதம் 2018-டிலும் இதேபோல அதன் மேலாண்மைப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு புதிய வாடிக்கையாளர்கள் சேர்வதைத் தடை செய்தது ரிசர்வ் வங்கி. டிசம்பர் 31, 2018 அன்று இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ன் பிரிவு 35A-ன் படி, பே டிஎம் பேமென்ட்ஸ் பேங்க் லிமிடெட் தனது நிறுவனத்தில் புதிய பயனாளர்களைச் சேர்ப்பதிலிருந்து தடை செய்யப்படுவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது மத்திய வங்கி.
இதுமட்டுமன்றி, ரிசர்வ் வங்கியின் ஆடிட்டர்கள் தங்களது விரிவான ஐ.டி குழுவைச் செயல்படுத்தி ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகே புதிய பயனாளர்களைச் சேர்க்கமுடியும். பே டிஎம் கட்டண வங்கியில் கண்டறியப்பட்ட சில தரவு மேற்பார்வைப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அது கூறியது.
ஐந்து வருடங்களாக வெறும் கட்டண வங்கியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பே டிஎம், சிறு நிதி உதவி வங்கியாகச் செயல்படுவதற்கான திட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அந்நிறுவனத்திற்கு ஒரு கவலைக்குரிய செய்தியாக அமைந்திருக்கிறது.
இதைப் பற்றிப் பே டிஎம் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மா பேசியபோது, “பே டிஎம் சர்வர்கள் அனைத்தும் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்தியாவைத் தாண்டி எங்கும் தகவல் பரிமாற்றம் நடக்கவில்லை” என்று கூறுயுள்ளார்.
மேலும், “‘Paytm Payments Bank’ பற்றிய சமீபத்திய Bloomberg அறிக்கை, சீன நிறுவனங்களுக்குத் தரவுக் கசிவு போன்ற செய்திகள் அனைத்துமே முற்றிலும் தவறானவை. இவை அனைத்தும் வெறும் பரபரப்பைத் தூண்டுவதற்காக வெளியிடப்பட்டவை” என்று Paytm Payments Bank தெரிவித்துள்ளது.