ஒரு படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் நடிகரைப் பற்றி உங்களிடம் கருத்து கேட்கிறார்கள். அந்த நடிகர் உங்களின் பேவரைட் ஸ்டார். அவரைப் பற்றியும் படத்தைப் பற்றியும் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு குரலோ அல்லது யாரோ அருகில் வந்து நிற்பது போலவோ தோன்றுகிறது. திரும்பி பார்க்கிறீர்கள்… ‘இது நிஜம் தானா’ என ஒரு நிமிடம் நம்ப முடியாமல் திகைக்கிறீர்கள். உங்கள் பின்னாடி நின்றது யாரைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்களோ அந்த நடிகரே தான். உங்கள் பதற்றத்தை உணர்ந்த அவர் உங்களை இயல்பாக்க கையைக் கொடுத்து வாஞ்சையாக கட்டி அணைக்கிறார். அந்த நடிகர் புனித் ராஜ்குமார். மார்ச் 17 அவரின் பிறந்தநாள். 2021 புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளுக்கு இந்த சர்ப்ரைஸ் நிகழ்வை அப்போது வெளியாகவிருந்த ‘யுவரத்னா’ படத்தின் ப்ரமோஷனுக்காக படக்குழு ஏற்பாடு செய்திருந்தார்கள். படக்குழுவுக்கோ, ரசிகர்களுக்கோ நிச்சயம் தெரிந்திருக்காது அது தான் அவருடைய கடைசி பிறந்தநாள் கொண்டாட்டம் என்று. அந்தக் காணொளி வைரலானபோது, ரசிகர்களால் அவரை ரசிப்பதைத் தாண்டி கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் 2021 அக்டோபர் 29 மாரடைப்பால் இறந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்ல தென்னிந்தியாவே கண்ணீர் சிந்தியது புனித்தின் மறைவிற்கு. மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு அவருக்கு அரசு மரியாதை செலுத்தின. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று இல்லாது புனித்தின் இறுதி சடங்குகளில் ஏராளமான எளிய மக்கள் கலந்து கொண்டனர். Kanteerava Studios இல் தந்தை ராஜ்குமார் சமாதிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கும் புனித்தின் மறைவிடம் தினந்தோறும் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. ‘எங்களின் கோவில்’ என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு நடிகர் என்ன செய்திருக்க முடியும்?
புனித் ராஜ்குமார் மிகப்பிரபலமாக இருந்த கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் -பர்வதம்மா இணையருக்கு 5ஆவது குழந்தையாக பிறந்தவர். ஆச்சரியமான விஷயம் அவர் பிறந்தது இங்கு சென்னையில் தான். அதன் பிறகு மைசூருக்கு இடம்பெயர்த்திருக்கிறார்கள். இளமையில் குழந்தை நட்சத்திரமாக தந்தையுடன் நடித்திருக்கிறார் புனித். 14 வயதிற்குள் 14 படங்கள், மாநில, தேசிய விருதுகள் என அறிமுகமானவரை ரசிகர்களின் மனதில் உச்சாணி கொம்புக்கு அழைத்து சென்றது 2002 இல் வெளியான அப்பு படம். அந்த படத்தின் பெயராலேயே ‘அப்பு’ எனச் செல்லமாக கன்னட மக்களால் அழைக்கப்படுகிறார்.
கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பின் விளம்பர தூதராக எந்தவித சன்மானமும் பெறாமல் இத்தனை ஆண்டுகளாக தன்னுடைய தந்தையைப் போலவே பணியாற்றிக் கொடுத்துள்ளார் புனித். நந்தினி என்ற பெயர் கொண்ட அமைப்பின் பால் விற்பனை அதிகரித்தற்கு இவரது பங்களிப்பும் காரணம் என பால் உற்பத்தியாளர்கள் அவருக்கு நன்றி சொல்கின்றனர். கன்னட திரையுலகில் உட்சபட்ச சம்பளம் பெறுகிற நடிகர்களில் ஒருவராக புனித் திகழ்ந்தார். வெளியே சொல்லாமலே புனித் ராஜ்குமார் செய்த ஏராளாமான நற்பணிகள் அவரது மறைவிற்கு பிறகே வெளிச்சத்திற்கு வந்தன. பெங்களூர் மெட்ரோபொலிட்டன் போக்குவரத்து கழகம், மாநில தேர்தல் ஆணையம், பெஸ்காம் எனப்படும் மின்துறை, கல்வித்துறை என அவர் தன்னுடைய புகழ் மூலமாக அடையாளப்படுத்திய பொது சேவைகள் ஏராளம்.
26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 பசு காப்பகங்கள், கன்னட மீடியம் பள்ளிகள், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் என புனித் நன்கொடை வழங்கும் பட்டியல் மிகப்பெரிது. வெள்ளம் போன்ற பேரிடர்கள் வந்த போது விரைந்து சென்று நீட்டப்படும் ஆதரவு கரங்களில் புனித்தும் இருப்பார். கோவிட் தொற்று ஊரடங்கு காலங்களில் தன்னுடைய பங்களிப்பாக மாநில அரசுக்கு 50 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். தன்னுடைய தந்தை தாயைப் போல மறைவிற்கு பிறகு தன்னுடைய கண்களையும் தானமாக வழங்க ஒப்புக் கொண்டிருந்தார் புனித். இன்றைக்கு அவர் நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு ரசிகர்களின் உற்சாக வரவேற்பு நெகிழ்ச்சியானது. இத்தனைக்கு பிறகும் அவரது எளிமையான அணுகுமுறையும் கபடமற்ற சிரிப்பும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அவரது நினைவுகளை மலரச் செய்து கொண்டிருக்கிறது.