கொரோனா வைரஸ் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் தீவிர சுவாச நோய்த்தொற்றுகளை கண்காணிக்கும் சோதனையை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசு மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் அதை நிர்வகிக்க இன்ஃப்ளூயன்சா போன்ற உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட தீவிர சுவாசத் தொற்றுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. சமீபத்தில் கொரோனா தொற்று சரிவை கண்டு வரும் நிலையில் இந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன. தற்போது அந்த சோதனையை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
சுவாசத் தொற்றுகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நேர்மறை மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய கோவிட் வேரியண்ட்டை சரியான நேரத்தில் கண்டறிய முடியும். எனவே போதுமான மாதிரிகள் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.
அதே சமயம் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை வழங்க வேண்டும், கோவிட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு தகுதியுடைய அனைத்து மக்களையும் ஊக்குவிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது.