நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இன்று உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஹெச் வினோத் – நடிகர் அஜித் – தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர், 2-வது முறையாக கூட்டணி அமைத்து உருவான படம் ‘வலிமை’. நடிகர் அஜித்தின் 60-வது திரைப்படமாக உருவான இந்தப் படம், நீண்ட இடைவெளி மற்றும் காத்திருப்புக்குப் பின், கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்து, புதிய படத்தை அறிவித்தது. நடிகர் அஜித்தின் 61-வது படமான இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி நடந்ததாகவும், வரும் மார்ச் 19-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை ‘அஜித் 61’ படக்குழுவினர் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இன்று உறுதி செய்துள்ளார். ‘அஜித் 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்திற்கு அனிருத் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என்றும், அடுத்த ஆண்டு இந்தப் படம் வெளியிடப்படும் என்றும் லைகா தெரிவித்துள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழிலநுட்ப குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் லைகா கூறியுள்ளது.
‘நானும் ரவுடிதான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அஜித் படத்தை இயக்க உள்ளதால், விக்னேஷ் சிவனுக்கு, இயக்குநர் நெல்சன் உள்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
An Official Announcement #AK62WithLycaProductions#AjithKumar #AK62 @LycaProductions @VigneshShivN @anirudhofficial @DoneChannel1 @ProRekha @AK62TheMovie pic.twitter.com/gfftODP7ZM
— Suresh Chandra (@SureshChandraa) March 18, 2022