அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
மாநிலம் முழுவதும் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும், அவற்றை மேம்படுத்தவும் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 36 கோடி ரூபாய் மதிப்பில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும் என்றும் இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் எனவும், இவற்றின் மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.