தட்சிண கன்னடா-மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், அமேசான் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்கி வீட்டிலேயே தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையத்தில் 2020- ஜனவரி 20ல் டிக்கெட் கவுன்டர் அருகே ஒரு பை, நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.அந்த பையை சோதனை செய்தபோது மூன்று வெடிகுண்டுகள் இருந்தன. அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். இது தொடர்பாக உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஆதித்யா ராவ், 35, என்பவர் பெங்களூரு டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்து போலீசாரிடம் சரண் அடைந்தார்.இந்த வழக்கில் இவருக்கு மங்களூரு நான்காவது கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று முன்தினம் 20 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.அவரிடம் நடத்திய விசாரணை குறித்து பல தகவல்கள் நேற்று வெளியாகின.அந்த நபர் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் வெடிகுண்டுகளை செய்வதற்காக பல்வேறு இணைய தகவல்களை சேகரித்துள்ளனர். ‘ஜஸ்ட் டயல்’ போன் தகவல் நிறுவனத்திற்கு போன் செய்து, தேவையான பொருட்கள் எங்கே கிடைக்கும் என்ற தகவல்களை திரட்டி உள்ளார். பின், அமேசான் இணையதளம் மூலம் வெடிகுண்டு செய்வதற்கான பொருட்களை ‘ஆர்டர்’ செய்து வாங்கியுள்ளார்.பின் வீட்டிலேயே, ‘யு டியூப்’ சமூக வலைதளத்தை பார்த்து வெடிகுண்டு தயாரித்துள்ளார். மேலும் இவர் ஏற்கனவே பெங்களூரு விமான நிலையம் மற்றும் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வெளிவந்துள்ளார்.மேலும் இதுபோன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் தான் பிரபலம் அடைவேன். அதனால் தான் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறி ஆதித்யா ராவ் போலீசாரிடம் கூறி இருந்தது தெரிய வந்துள்ளது.
Advertisement