உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரால் உலகமே உக்ரைன் எப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும், உக்ரேனியர்களின் முகத்தில் மீண்டும் எப்போது புன்னகையைக் காணமுடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் நான்காவது வாரத்தை எட்டிவிட்டது. போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போர் தொடங்கிய நாள்முதல், ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டு, தங்கள் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளித்துவருகிறார்.
மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து ஜெலன்ஸ்கி நேட்டோ பாராளுமன்றத்தில் உக்ரைன் மக்களுக்காக மிகவும் உருக்கமாகப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு நேட்டோ பாராளுமன்றம் எழுந்து நின்று பாராட்டியது. அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. இந்த நிலையில், ஐரோப்பாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள், 2022-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிரிவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பரிந்துரைக்குமாறு நோபல் தேர்வுக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “அமைதிக்கான நோபல் பரிசுக்கான 2022 பரிந்துரை நடைமுறையை மீண்டும் திறந்து மறுபரிசீலனை செய்ய நோபல் பரிசுக் குழுவை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். உக்ரைனிலிருந்து வரும் போர் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பு நடத்தும் இந்த போரை எதிர்க்கும் உக்ரைன் மக்களின் துணிச்சலுக்கு நாங்கள் சாட்சிகள். இந்த நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக குடிமக்கள் அனைவரும் ஒரே கேள்வியைக் கேட்கிறார்கள். அது உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிக்க நாம் என்ன செய்ய முடியும்? என்பதே. உலகம் தங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்களுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையை அனுமதிக்க, அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரை நடைமுறையை மார்ச் 31, 2022 வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இது நடைமுறைக்கு ஒரு இடைவெளி என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலையால் இந்த இடைவெளி நியாயமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஜனநாயகத்துக்காகவும் அவர்களின் சுயராஜ்ய உரிமைக்காகவும் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பதென்பது நமது ஜனநாயகக் கடமையாகும். நாகரிகத்தின் போர்வை மெல்லிய காகிதம், நாம் அதன் பாதுகாவலர்கள், நாம் ஒருபோதும் ஓய்வெடுக்க முடியாது” என்று கூறியிருந்தனர்.