காரைக்கால்: அரசு அதிகாரிகள் புதுச்சேரி அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து, அது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, அதனடிப்படையில் புதுச்சேரி அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும். புதுச்சேரி சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும். இடைக்கால பட்ஜெட்டா, முழுமையான பட்ஜெட்டா என்பது குறித்து முதல்வர் தலைமையிலான அமைச்சரவைதான் முடிவு செய்யும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் பிரதமர் இலங்கை செல்லவுள்ளார். அப்போது நல்ல தீர்வு ஏற்பட்டு காரைக்கால் மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியிறவுத் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளோம்.
போதுமான நிதி ஒதுக்குமாறு மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.33 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. ரூ.7.6 கோடி ரூபாய்க்கு மட்டுமே அரசு அதிகாரிகள் திட்ட வரைவு அளித்துள்ளனர். அதனால் மீதமுள்ள தொகை திரும்ப செல்லும் நிலை உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேலை செய்தது போலவே இந்த அரசிலும் அதிகாரிகள் வேலை செய்து கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகள் புதுச்சேரி அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதை குற்றச்சாட்டாகவே சொல்கிறேன். வேலை செய்யாத அரசு அதிகாரிகள், அரசுப் பணத்தை வீணடிப்போர், ஒதுக்கீடு செய்த பணத்தை மறைமுக வழியில் திருப்பி அனுப்ப காரணமானோர் மீது முதல்வரின் ஆணையோடு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடக்கவுள்ள சட்டப்பேரவைத் கூட்டத் தொடர் வித்தியசமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.