பிரஸ்சல்ஸ்:
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது.
அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை நூற்றுக்கணக்கான டி.என்.ஏ. மாதிரிகள் என பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்த போதும் பலன் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் கொலை நடந்த 16 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஆசிரியை மரியா வெர்லிண்டனை கொன்றது முன்னாள் மாணவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
37 வயதான கன்டர் உவென்ட்ஸ் என்பவர் தனது 7 வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்தார். அப்போது கன்டர் உவென்ட்ஸ் பற்றி ஆசிரியை மரியா சில கருத்துக்களை தெரிவித்தார்.
இது தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கன்டர் உவென்டஸ் ஆத்திரம் அடைந்தார். அதை மனதில் வைத்து கொண்டே இருந்து அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.