இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் இரண்டு ரேடார்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் மழைக்காலங்களில் துல்லியமாக கணித்து துரிதமாக செயல்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பருவமழை ஜூலை முதல் தொடங்கி டிசம்பர் வரை பெய்கிறது. வருடந்தோறும் தமிழகத்தில் சராசரியாக 791 மி.மீ மழை பதிவாகிறது. பருவநிலை மாற்றத்தால் மாறிவரும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மழை அளவு, பெய்யும் கால நேரம், இடங்கள் போன்றவை மாறுபடுகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கணிக்கப்பட்ட அளவைவிட அதிகமழை பெய்தது. கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் திடீரென பெய்த மழையால் நகரமே தத்தளித்தது.
சுமார் மூன்று மணி நேரத்தில் பல இடங்களில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு காரணம் மேகவெடிப்பு இல்லை எனக் கூறப்பட்டாலும், இதுகுறித்து முன்கூட்டியே கணிப்பதற்கான துல்லிய ரேடார் வசதி இல்லை என்கிற குற்றச்சாட்டு பல தரப்புகளில் இருந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரேடார் குறைபாட்டால் மழை அளவை கணிக்க முடியவில்லை; அதனால் முன்னெச்சரிக்கையாக செயல்பட முடியவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் 14ம் தேதி பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் புதிய எஸ் பேண்ட் வகை ரேடார் ஒன்று நிறுவப்பட்டது. சென்னை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்காலில் மூன்று எஸ் பேண்ட் வகை ரேடார்கள் இருக்கும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நிலவும் வானிலையை கண்காணிப்பதில் உதவிகரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருந்தும் தமிழகத்தின் மொத்த பரப்பை நிகழ்கால அளவாக துல்லியமாக கணக்கிடும் வகையில் ரேடார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் 2022 இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வானிலை மேம்பாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த அறிவிப்பை வெளியிட்டார். 2 ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 மழைமானிகள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே வானிலையை கண்காணிக்கும் ரேடார் அமைக்க நிதி ஒதுக்கியுள்ள மாநிலம் தமிழகம்தான் என்கின்ற பெருமையை பெற்றுள்ளது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டா, சென்னை நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணை, காரைக்கால் போன்ற இடங்களில் நான்கு ரேடார்கள் உள்ள நிலையில், மேலும் 2 ரேடார்கள் அமைக்கப்பட்டால் எண்ணிக்கை 6 என தமிழகத்தில் அதிகரிக்கும்.
இரண்டு ரேடார்களில் ஒன்று கடற்கரையை நோக்கியும், மற்றொன்று மாநிலத்தின் உன் மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இதன் மூலம் வரும்காலங்களில் மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் மத்திய புவி மற்றும் அறிவியல் துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் இவை இயங்குவதற்கான நீதிகளும் ஒதுக்கப்படும் என்கின்ற தகவல்களும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM