கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் எழுதி உள்ளது.
அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா தொற்று, இந்தியாவுக்குள், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலடி எடுத்து வைத்தது. இது நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மூன்று அலைகளை இந்தியா சந்தித்து விட்டது. கொரோனா மூன்றாவது அலையின் பரவலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் உயிரிழப்பு குறைவாக இருந்தது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையில் சிக்கிய நோயாளிகள், ஆக்சிஜன் குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும்
சீனா
மற்றும் ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, சீனாவில் உள்ள 10 நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல், நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளன.
இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர்
ராஜேஷ் பூஷன்
அவசரமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.