டில்லி: இந்தியா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத் தொடர்பை புதுப்பிக்க ஈரான் அரசு விரும்புவதாக டில்லியில் உள்ள ஈரான் தூதரகம் தகவல் அளித்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் ஈரான் அரசு தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தது.
இதனை அடுத்து ஈரானின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் வகையில் டிரம்ப் அமெரிக்காவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தடை செய்து, பல்வேறு தடை உத்தரவுகளை ஈரானுக்குப் பிறப்பித்தார்.
அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தக தொடர்பை துண்டித்து இருந்தது. தற்போது அமெரிக்காவில் ஜோ பைடனின் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது.
ரஷ்ய உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் ரஷ்யாவிலிருந்து வர்த்தகமாகும் கச்சா எண்ணெய் உலகின் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரான் கச்சா எண்ணெய்யை நம்பியே வர்த்தகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தற்போது இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் இது குறித்து ஓர் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. மூன்றாம் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இந்தியாவுடன் நேரடியாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட ஈரான் அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மோடி அரசு தற்போது பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement