உத்தரபிரதேசத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் இரண்டு முக்கியமான செயல்களை செய்தாக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவது இருக்கட்டும், முதலில் கட்சியை பலப்படுத்துங்கள் என என்டிடிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், ”உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக கட்சி வறண்டு கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். உ.பி.யில் பொறுப்பாளராக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை செய்தாக வேண்டும். முதலில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அடுத்ததாக தேர்தலில் போட்டியிட வேண்டும். இரண்டுமே ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதை நான் அவர்களுக்கு எச்சரிக்கிறேன். முதலில் கட்சியை பலப்படுத்திவிட்டு, பின்னர் தேர்தலை சந்திக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக கட்சியை பலப்படுத்துவதும், தேர்தலை சந்திப்பதும் ஒரே நேரத்தில் அரங்கேறியிருக்கிறது.
கட்சியில் நான் மற்றும் மற்றவர்கள் சுட்டிகாட்டியது போல பலவீனங்களை சரிசெய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அனைவரும் திரும்பிச் சென்று கட்சி அலகுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். பொறுப்பில் இருந்து யாரும் ஓடுவதில்லை. ஆனால் தொகுதி, மாவட்டம், மாநிலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டத்தில் தலைமைப் பதவியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை பொறுத்தவரை 1989ம் ஆண்டுக்குப்பிறகு உத்தரபிரதேசத்தில் ஆட்சி செய்ய முடியவில்லை. கடந்தந 2017ம் ஆண்டு உ.பி. சட்டமன்ற தேர்தலில் 7 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் தற்போது அதிலும் கூட 5 இடங்களில் தோல்வியடைந்துள்ளது. கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 சதவீதமாக சுருங்கியிருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM