காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழுவில் உள்ள குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம் அதிருப்தி குழுவில் உள்ள தலைவர்கள் கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் வரை, தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததை அடுத்து அதிருப்தி தலைவர்களின் ஜி23 குழு, குலாம் நபி ஆசாத் வீட்டில் கூடி கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தது. இப்போது காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனில் ஒருங்கிணைந்த தலைமை அவசியம் என்ற கருத்தை முன்வைத்தனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும், அதன் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு சிறிதும் இல்லை என்றும் கூறியிருந்தனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில உறுதியான முடிவுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிக்க ஜி23 தலைவர்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான குலாம் நபி ஆசாத் இன்று சோனியா காந்தியை சந்தித்து, இது பற்றி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ராகுல் காந்தியை நேற்று சந்தித்த ஜி23 குழுவில் இருக்கும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்வது பற்றி விவாதித்ததாக தெரிகிறது. அப்போது கட்சி தலைமை பொறுப்பில் இருந்து சோனியா காந்தியின் குடும்பம் விலக வேண்டும் என்ற கபில் சிபலின் கருத்தை ஜி23 தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே தங்களது குறிக்கோள் என்றும் ராகுல் காந்தியுடனான சந்திப்பின்போது ஹூடா கூறியதாக தெரியவந்துள்ளது.
அதே நேரம் ஜி23 தலைவர்களுடன் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை களைய காங்கிரஸ் தலைமையும் விரும்புவதாக தெரியவந்துள்ளது. இதனால், விரைவில் காங்கிரஸ் கட்சிக்குள் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM