சென்னை: வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
வேலைவாய்ப்புக்கு உகந்த வகையில் பொறியியல் பாடத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னைஅண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொறியியல் துறை பேராசிரியர்கள் பங் கேற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
படிக்கும்போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சியை அளிக்கவேண்டி உள்ளது. அந்த வகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்றைய காலத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அதற்கு ஏற்பபாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளாக பாடத் திட்டம் மாற்றப்படவில்லை. இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில்சிறந்த பாடத் திட்டமாக அது வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கு உயர்கல்வித் துறை, தொழில் துறை, தொழில்நுட்பத் துறை ஆகிய3 துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற, முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம். இன்றைய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை பயிற்றுவிப்பது ஆசிரியர் களின் கடமை.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) இணைய பாதுகாப்பு, டேட்டா சயின்ஸ், தானியங்கி உள்ளிட்ட துறைகளில் புதிதாக 21 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத் திட்டம் உருவாக்கப்படும். மாணவர்களுக்கு படிப்பறிவு, பட்டறிவு, சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு ஆகிய 3 விதமான அறிவுகள் அவசியம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவ்வாறு இல்லாமல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒருங்கிணைந்த பாடத் திட்டம் இருக்க வேண்டும். அந்தந்த பகுதிக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் இருக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசும்போது, ‘‘அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்தநாடுகளைவிடவும் தமிழகத்தில் உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கை அதிகம் என்பதுபெருமைக்குரிய விஷயம். அதேநேரம், கல்வியின் தரத்திலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். கல்வி நிறுவனங்களிலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அளிக்கவேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் தகுதியான இளைஞர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்தின. ஆனால், இன்று, மாணவர்களே அந்த பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன’’ என்றார்.
பயிலரங்க தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன், தகவல்தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல்,தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜி.லட்சுமிபிரியா, அண்ணா பல்கலை.துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.