ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்து தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 6 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் மே 27 அன்று நேரில் ஆஜராகவும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் முத்துக்குமார் (32), பாலு (47), ரெங்கதுரை (48), கம்மாகரையான்(64), பூபதி (32), மனோஜ்குமார் (25) ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த பிப்ரவரி 18 அன்று கடலுக்குச் சென்றனர்.
மறுநாள் நெடுந்தீவு அருகே படகைக் கைப்பற்றி அதிலிருந்த 6 மீனவர்களை எல்லை தாண்டியக் குற்றஞ்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்தனர். 6 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கஜநிதிபாலன் இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்தும், மேலும் மே மாதம் 27ம் தேதி அன்று படகின் உரிமையாளர் குமரேசன் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.