பெங்களூரு-உகாதி பண்டிகைக்கு பின் கர்நாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டால், நான்கு துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி துணை முதல்வர்களாக இருந்தனர். அரசியல் சூழ்நிலை மாறியதில், முதல்வர் மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார்.வரும் உகாதி பண்டிகையை தொடர்ந்து, ஏப்ரல் 8க்கு பின், அமைச்சரவை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது. பல முறை பதவிகளை அனுபவித்த சிலர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன்படி மாற்றியமைந்தால், நான்கு துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்படக்கூடும். உகாதி பண்டிகை முடிந்த பின், டில்லிக்கு வரும்படி, கட்சி மேலிடத்திடமிருந்து, முதல்வருக்கு அழைப்பு வரக்கூடும். அவரும் தயாராகவே உள்ளார்.அமைச்சரவை மாற்றியமைக்கப்படா விட்டால், குருபர் சமுதாயத்தின் ஈஸ்வரப்பா, பஞ்சமசாலி சமுதாயத்தின் பசனகவுடா பாட்டீல் எத்னால், எஸ்.சி., பிரிவின் கோவிந்த் கார்ஜோள், எஸ்.டி., பிரிவின் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.ஒருவேளை மூத்தவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டால், ஈஸ்வரப்பா, கோவிந்த் கார்ஜோள் பதவியை விட்டு கொடுக்க வேண்டி வரும்.ஒக்கலிக சமுதாயத்தின் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு, துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.இதற்கிடையில், மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீலின் பதவி காலம், விரைவில் முடிவடையவுள்ளது. இவரால் காலியாகும் இடத்துக்கு, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி பெயர் அடிபடுகிறது.சி.டி.ரவி மாநில தலைவரானால், ஒக்கலிகர் சமுதாயத்துக்கு, துணை முதல்வர் பதவி கை நழுவும் வாய்ப்பு உள்ளது.
Advertisement