கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டி இருக்கிறது.
தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. குறிப்பாக கீவ், கார்கிவ் நகரங்களில் தாக்குதல் தீவிரமாக இருந்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம், சமுதாய கூடம் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டிடங்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுக்கப்பட்டதில் தரைமட்டமானது.
பள்ளி, சமுதாய கூடத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கி இருந்தனர். தாக்குதல் காரணமாக அவர்களது கதி என்ன ஆனது என்பது குறித்து தகவல் தெளிவாக வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் மெரேபாவில் பள்ளி, சமுதாயக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
கார்கிவ் நகரில் உள்ள ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோலோ சந்தையில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
இதே போல் கார்கிவ் நகரின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகர் கிவ்வில் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது.
கீவ்வில் உள்ள ஸ்வியா டோஷின்ஸ்கி பகுதியில் குண்டுகள் வீச்சில் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
துறைமுக நகரமான மரியுபோலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர்கள் கதி என்ன ஆனது? என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் தியேட் டர் மீது தாக்குதல் நடந்த போது 130 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் கீவ்வை பிடிப்பதில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ளதால் அங்கு ரஷிய படைகள் தாக்குதலை அதிகப்படுத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்தபடி இருப்பதால் மக்கள் பீதியுடன் உள்ளனர்.
பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்கள் மற்றும் முகாம்களில் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான நகரங்களில் உணவு மற்றும் தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதையும் படியுங்கள்… சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு