உக்ரைனுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும்! – கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகம் கோரிக்கை



உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்கவேண்டும் என மேற்குலநாடுகளின் தூதுவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறிக்கையொன்றை வெளியிட்ட அவர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறைமையுள்ள ஜனநாயக நாடான உக்ரைன் மீதான ரஸ்யாவின் தூண்டப்படாத நியாயமற்ற சட்டவிரோத படையெடுப்பை நாங்கள் மிகவும் கடுமையாக கண்டிக்கின்றோம்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் ஐநா சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறும் செயலாகும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதை உலகம் அச்சத்துடன் பார்த்தவண்ணமுள்ளளது.
ரஷ்யா பொதுமக்கள் வாழும் பகுதிகள் கட்டமைப்புகள் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பெண்கள்குழந்தைகள் முதியர்வர்கள் உட்பட மில்லியன் கணக்காண மக்கள் அயல்நாடுகளிற்கு அகதிகளாக தப்பிவெளியேவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இ தன் காரணமாக கடந்த 70 வருடங்களில் மிகவேகமாக அகதிகள் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பு என்பது அமைதியான நாட்டின் மீதான தூண்டப்படாத நியாயமற்ற நடவடிக்கையாகும்.
உலகில் சமாதானம் அமைதி என்பவற்றிற்கான அடித்தளமாக உள்ள இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,ஆனால் அது அமைதி பாதுகாப்பு அபிவிருத்தி நீதி சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் உறுதியாக நின்றுள்ளது.

சர்வதேச சமூகம் உக்ரைனிலும் அனைத்து மனித குலத்திற்கும் இந்த விழுமியங்கள் உறுதிப்படுத்தப்படுவதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுதி செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கைக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வெளியிடுகின்றோம்.

உக்ரைனிற்கான மிகப்பெரும் ஆதரவு காரணமாக ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன்மீதான ரஷ்ய அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிப்பதில் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம்.

மார்ச் இரண்டாம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 141 நாடுகள் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இது ரஷ்யா சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக உக்ரைனிற்குஆதரவளிக்கும் நாடுகள் முன்னர் ஒருபோதும் இடம்பெறாதவகையில் ரஷ்யாவிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனிற்கு எதிரான தாக்குதல்களை தொடரும் ரஷ்யாவின் திறனை குறைப்பதும்,உக்ரைனிற்கு எதிரான விரோதப்போக்கிலிருந்து ரஷ்யாவை பின்வாங்க செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இதன் நோக்கம்.

வங்கிகள் முதல் எண்ணெய் நிறுவனங்கள் கால்பந்தாட்ட கழகங்கள் வரை புட்டினின் நடவடிக்கைகளிற்கு விளைவுகள் இருக்கும் என்பதையும் அவரது அரசாங்கம் இனிமேல் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

உக்ரைனின் சகாக்களும் நண்பர்களும் குறிப்பிடத்தக்க அளவு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் உக்ரைனிலிருந்து தப்பிவருபவர்களிற்கு தங்கள் எல்லைகளை திறந்துள்ளன.

தனது படையெடுப்பை நியாயப்படுத்தும் விதத்தில் ரஷ்யா பொய்யான கதைகளை வெளியிடுகின்றது.
ரஷ்யா அதன் படையெடுப்பை நியாயப்படுத்தும் ஒரு போலியான முயற்சியில் உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான போலியான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

அதன் ஜனநாயக அயல்நாடுகளை அழிக்க நினைக்கும் ரஷ்யாவின் பிரச்சாரம் எந்த நியாயமும் இல்லாதது.
நேட்டோ ஆத்திமூட்டுகின்றது என ரஷ்யா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது.நேட்டோ எப்போதும் ஒரு தற்பாதுகாப்பு கூட்டணியாகவே இருந்துவந்துள்ளது.

அதனால் ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நாங்கள் இலங்கை உக்ரைனிற்கும் சர்வதேச அமைதிமற்றும் பாதுகாப்பிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள்விடுக்கின்றோம்.

இலங்கையில் உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் உக்ரைனிற்கும் ஐநா சாசனம் சர்வதேச சட்டத்திற்குமான குரல்களுடன் இலங்கை இணைந்து கொள்ளவேண்டும் என நாங்கள் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றோம்.

ரஷ்யா தனது மோதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுப்பதில் இலங்கை எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உக்ரைனின் இறைமை மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்காக நாங்கள் உலகெங்கிலும் உள்ள எங்கள் சகாக்கள் நண்பர்களுடன் இணைந்து பாடுபடுவோம்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.