ரஷ்யப் படைகள் உக்ரைனில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் திரையரங்குகள், மால்கள், வழிபாட்டுத் தலங்களிலும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருவதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நான்காவது வாரமாக போர் நீடிக்கும் நிலையில், ரஷ்யப் படைகள் முன்னேற விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யா அப்பாவி மக்கள் மீது குறிவைத்துத் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாரியுபோல் நகரில் திரையரங்கம் ஒன்றின் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து தகர்த்தது. இதில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளும் பெண்களும் உள்ளிட்ட அப்பாவி மக்கள் தஞ்சம் புகுந்திருந்ததாகக் கூறப்படுகிறது. திரையரங்குக்கு வெளியே குழந்தைகள் இருப்பதைசுட்டிக் காட்டும் பதாகை இருந்ததை சாட்டிலைட் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் அதனையும் மீறி ரஷ்யா அங்கு குண்டுகளைப் பொழிந்து சேதம் விளைவித்துள்ளது. இத்தாக்குதலில் பலர் உயிர்தப்பியதாகவும் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது இடிபாடுகளுக்கு இடையில் அவர்களின் உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.