உதகை: உதகை நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்பு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தமிழக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
1823-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ஸ்டோன்ஹவுஸ் (இப்போது அரசு கலைக் கல்லூரி), மலைகளின் முதல் நவீன கட்டிடம், அப்போதைய ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவனின் உத்தியோகபூர்வ இல்லமாகவும் அலுவலகமாகவும் திறக்கப்பட்டபோது, ஒட்டகமண்டு அல்லது ஊட்டி ஆங்கில பேரரசின் முதல் மலைவாசஸ்தலம் ஆனது. ஜான் சல்லிவன், உதகையை தோற்றுவித்த 200-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு விழா நடத்த நீலகிரி ஆணவக் காப்பகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் சிறப்பு விழா நடத்தவும், சிறப்புத் திட்டங்களுக்கும் தமிழக பட்ஜெட் 2022-ல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு நீலகிரி ஆவண காப்பகம் நன்றி தெரிவித்துள்ளது. நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறியது: “தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு நன்றி. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆகியோரின் முயற்சியால் உதகை 200 வரலாற்று நிகழ்வுக்கு அரசு பட்ஜெட் அங்கீகாரம் மற்றும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
உதகையில் நீர் வழங்கல், சாலைகள், வடிகால், வாகன நிறுத்தம் மற்றும் சரிபார்க்கப்படாத கட்டுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான கட்டத்தில் அரசாங்க அங்கீகாரம் வந்துள்ளது.
வரும் ஆண்டுகளில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கையாளும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் தலங்களின் அடிப்படையில் உதகைக்கு நீண்டகாலத் திட்டத்தை வகுக்க மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசாங்கம் அமைக்கும் என்று நம்பப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உதகை நலன் விரும்பிகள் சார்பாக, முதலமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் நீலகிரி எம்பியின் அங்கீகாரத்துக்கும்,
ஆதரவுக்கும் நீலகிரி ஆவண காப்பகம் நன்றி தெரிவிக்கிறது. உதகை நகரம் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சிறப்பு நாட்காட்டி மற்றும் இலட்சிணை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.
மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, ”தமிழக அரசு பட்ஜெட்டில் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னாள் ஜான் சலீவன் இந்த நகரை தோற்றுவித்தார். அதை நினைவுகூரும் கையில் சிறப்பு திட்டம் செயல்படுத்த எம்பி, அமைச்சர் மூலம் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதகை நகருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் செயல்படுத்தப்படும். உதகை 200-ஆம் ஆண்டு நிறைவடைந்ததை கருத்தில் கொண்டு ரூ.114 கோடியில் உதகை நகரின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது, பன்னடுக்கு வானக நிறுத்துமிடம், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற சிறப்பு திட்டங்களுக்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பியுள்ளோம். நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பதல் பெற்று பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.
200-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சிறப்பு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவத்துக் கொள்கிறோம்” என்றார்.