புதுடெல்லி: உலகின் மற்ற நாடுகளை விட ஒமிக்ரான் பரவலை இந்தியா சிறப்பாக கையாண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் பொது சுகாதார நடவடிக்கை குறித்த காணொலி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் பேசியதாவது:
ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகளாவிய கரோனா பரவல் முந்தைய அலைகளை 6 மடங்கு உச்சத்திற்கு சென்றது. ஆனால் மற்ற நாடுகளை விட இந்த அலையை இந்தியா சிறப்பாக கையாண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை முந்தைய அலைகளை விட குறைவாகும்.
மார்ச் 15-ம் தேதியுடன் முடியும் ஒரு வார காலத்தில் இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3,536 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளாவிய பாதிப்பில் இந்தியா 0.21 சதவீதம் மட்டுமே பங்களித்துள்ளது.
பல நாடுகளில் கரோனா பாதிப்புதற்போதும் அதிகரித்து வருகிறது. இது அவர்களின் முந்தைய அலைகளை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் அலையின் உச்சம் மிகவும் குறைவாக இருந்தது. தொடர் முயற்சிகளின் காரணமாக விரைவில் அது குறையத் தொடங்கியது.
துரிதமான தடுப்பூசி பணிகள், தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவற்றால் மூன்றாவது அலையில் குறைவான நபர்களேமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது.
இந்தியாவில் மூன்றாவது அலைக்கான முதல் அறிகுறி கடந்த டிசம்பர் இறுதியில் காணப்பட்டபோது, தகுதிவாய்ந்த 90.8 சதவீத மக்களுக்கு இந்தியா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டது. இது உயிர்களை காப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
இந்தியாவில் இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது அமெரிக்காவை விட 3.2 மடங்கு மற்றும் பிரான்ஸ் நாட்டை விட 12.7 மடங்கு அதிகமாகும்.
இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரி கூறினார்.
சிறுவர்களுக்கு 2.16 லட்சம் டோஸ் நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கோர்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘பயலாஜிக்கல் இ’ நிறுவனம் தயாரித்துள்ளது. 28 நாட்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசியை சிறுவர்களுக்கு 2 டோஸ்கள் செலுத்த வேண்டும். நாடு முழுவதும் 2021 மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் 4.7 கோடி பேர் உள்ளனர். அவர்களில் முதல் நாளில் 2.16 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளிலும் முகாம்களிலும் மட்டுமே சிறுவர்களுக்கு கோர்பிவேக்ஸ் செலுத்தப்படுகிறது. இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு தனியார் மருத்துவமனைகளிலும் சிறுவர்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
– பிடிஐ