சான் ஜுவான்: “மிஸ் வேர்ல்டு 2021” உலக அழகிபட்டத்தை போலந்தை சேர்ந்த கரோலினா பைலாஸ்கா வென்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் ஸ்ரீ சைனி 2-வது இடம் பிடித்தார்.
போர்ட்டோ ரிகா தலைநகர் சான் ஜூவானில் “மிஸ் வேர்ல்டு 2021” உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு கட்டங்களுக்கு பிறகு நேற்று இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாஸ்கா முதலிடம் பிடித்து “மிஸ் வேர்ல்டு 2021” பட்டத்தை வென்றார். மேலாண்மை நிர்வாகத்தில் முதுகலை பயின்று வரும் அவர்,நீண்டகாலமாக மாடலிங் துறையில் கோலோச்சி வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த சைனிக்கு 2-வது இடம் கிடைத்தது. இவர் பஞ்சாபின் லூதியாணாவை பூர்விகமாக கொண்டவர். அவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை சஞ்சீவும் தாய் எக்தாவும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குடியேறினர். மிஸ் வேர்ல்டு அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி பெண்ணான இவர், தற்போது “மிஸ் வேர்ல்டு 2021” போட்டியில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா 3-வது இடம் பிடித்தார். இந்தியாவை சேர்ந்த மான்சா வாரணாசி, இறுதிச் சுற்று போட்டிகளின்போது 13 பேரில் ஒருவராக இடம் பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற 6 பேருக்கான போட்டியில் அவர் தேர்வாகவில்லை.