தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க – வின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வார்த்தை யுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு முறைகேடாக 4,472 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அண்ணாமலை எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தார். 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துக் கெடு விதித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. வாழ்ந்த 13,700+ சொச்ச நாள்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்குப் புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ளப் பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலை, “என் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். இதற்காக காத்திருக்கிறேன். என் மீது என்ன நடவடிக்கை எடுக்கத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள், நான் காத்திருக்கிறேன். எனக்குக் கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா? அவரின் ஒவ்வொரு ஊழலையும் வெளிப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.