எண்பதுகளின் தமிழ் சினிமாவில் ஃபிட் அண்ட் ஸ்மார்ட் ஆக அறிமுகமானவர் அருண்பாண்டியன். `ஊமை விழிகள்’, `இணைந்த கைகள்’ எனத் திரும்பிப்பார்க்க வைத்தவர். விஜயகாந்தின் பல படங்களைத் தயாரித்தவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விஜய்யின் ‘சர்கார்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘பரியேறும் பெருமாள்’ என படங்களை ஓவர்சீஸில் ரிலீஸ் செய்தவர். இப்போது கருணாஸின் ‘ஆதார்’, அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் இல்லாத நாட்களில் ஊரில் விவசாயம் செய்து வரும் அருண்பாண்டியனிடம் பேசினேன்.
`அன்பிற்கினியாள்’ படத்திற்கு பிறகு பத்து படங்கள் வந்தது. எல்லாம் அண்ணன், அப்பா ரோல்கள்னால வேணாம்னு இருந்துட்டேன். இப்ப எனக்கு அறுபது மூணு வயசு ஆகுது. விக் வைக்காமல், ஸ்டூடண்ட் மாதிரி கெட்டப் மாத்தாமல் இந்த தோற்றதுக்கு இயல்பான கதாபாத்திரமா வந்தால் நடிக்க ரெடியா இருக்கேன். அப்படித்தான் இப்ப ரெண்டு படங்கள் நடிக்கறேன். ” என கலகலக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஓவர்சீஸ் பிசினஸை பெரிய மார்க்கெட் ஆகவே சொல்றாங்க. வெளிநாட்டுல இந்தப் படம் பிரமாண்டமா வசூல் செய்திருக்கு; ஃபாரீன்ல பிளாக்பஸ்டனு எல்லாம் இங்கே போஸ்டர் ஒட்டுறாங்க. ஒரு தயாரிப்பாளராகவும் உங்களுக்கு இந்த கேள்வி. நிஜம் என்ன?
”எதுவுமே மிகச்சரியான கணக்கு இல்ல. எல்லாமே பொய்யான எண்ணிக்கைகள். நிறைய ஃபிகர்ஸ். ஏன்னா, ஒரு க்ராஸ் கலெக்ஷன் இருக்குதுனா. அந்த க்ராஸ் கலெக்ஷன்ல தியேட்டர் ஷேர் ஒண்ணு இருக்கும். செலவுகள் ஒண்ணு இருக்கும். அதுக்கப்புறம் தான் வர்ற ஷேர் நமக்கு. விநியோகஸ்தர் ஒருவத்தருக்கு நாற்பது பர்சன்ட் போகக்கூடிய ஷேர் கணக்கை சொல்ல மாட்டாங்க. அங்கே படத்தோட மொத்த வசூல் என்னவோ அதைத்தான் சொல்வாங்க. அதுவுமில்லாமல் கொரோனாவுக்கு பிறகு ஓவர்சீஸ் மார்க்கெட் ரொம்பவே ஸ்லாஷ் ஆகிடுச்சு. சின்னச் சின்ன படங்களை எல்லாம் வெளியூர்கள்ல விற்கவே முடியல. வெளியூர்கள்லேயும் பார்க்கறதுக்கு ஆளும் இல்ல. ஒடிடி டாமினேஷன் அதிகமா இருக்கு..”
“ஒடிடி தளம்.. தயாரிப்பாளருக்கு லாபமானதாகத்தானே இருக்கு?”
‘கிட்டத்தட்ட ஏழு ஒடிடி தளம் இருக்கு. ஏழு தளத்துலையும் மாசத்துக்கு ஒரு படம் வெளியாகுதுனு கணக்கு வைப்போம். ஒரு வருஷத்துல 100 படம் வெளியாகுதுனு வைப்போம். ஆனா, இங்கே 220 படங்கள் தயாரிக்கிறோம். இருநூறு படங்கள் ரெடியாகுதுனே வைப்போம். இப்ப ஒடிடி வாங்கின நூறு படங்கள் போக, மீதமுள்ள நூறு படங்களின் கதி என்னவாகுது? தேவை குறைவா இருக்கு. ஆனா, சப்ளை அதிகா இருக்கு. ‘ஒடிடி வந்ததால, சினிமாவுக்கு வரப்பிரசாதம்’னு வெளியே வேற பார்வை இருக்கு. ஆனா எல்லாப் படங்களுமா ஒடிடிக்கு வருது? அதில்லாம ஒடிடிகாரங்கதான் ‘இந்த படத்துக்கு என்ன விலை கொடுக்கணும்’னு அவங்கதான் நிர்ணயிக்கிறாங்க. நம்ம கையில டிமாண்ட் இல்ல. பயிரை விளைவிக்கிற விவசாயி விலையை நிர்ணயிக்க முடியாத சூழல் இருக்குதோ… அப்படி படத்தை தயாரிச்சவங்க… அதோட விலையை நிர்ணயிக்க முடியாத சூழல்தான் இங்கே நிலவுது… ஆனா, ‘அன்பிற்கினியாள்’ ஒடிடியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அமேஸான்ல இருந்து ‘உங்க அடுத்த படம் என்ன?” கேட்டு மெயில்கள் வருது.”
“நீங்க அரசியல்ல இருந்தபோது… உங்க மேலேயும் ஒரு குற்றச்சாட்டு எழுந்ததே…?”
”அப்படி வாராமல் இருந்தாதான் ஆச்சரியப்படணும்… அரசியல்ல இருந்தா ஒரு குருப் நல்லது பேசும். இன்னொரு குருப் தவறா பேசும். நானும் அரசிய்லல இருந்திருக்கேன். நான் தேர்தல்ல நின்றபோதுகூட எதிர் தரப்பினரை தப்பா பேசினதில்ல. நான் என்ன செய்யப்போறேன் என்பதை மட்டும் சொன்னேன். ”
உங்களுக்கு மூணு மகள்கள்.. அதுல கீர்த்தியை எல்லாருக்கும் தெரியும். ‘அன்பிற்கினியாள்’ பொண்ணு. மத்தவ பொண்ணுங்க என்ன பண்றாங்க?
”கீர்த்தி இப்ப ‘கண்ணகி’னு ஒரு படம் பண்றா. கிரனா வெளிநாட்டுல படிக்கறா. முதுநிலையில ரெண்டு டிகிரி முடிச்சிருக்கா. சுற்றுச்சூழல்ல முனைவர் பட்டமும் வாங்கப்போறா. இன்னொரு பெண் கவிதா. என்னோட தயாரிப்பு நிறுவனத்துல எனக்கு துணையா இருக்கா. என்னோட படங்கள் தொடர்பான புரொமோஷன்கள்ல இருந்து மத்த வேலைகளை அவங்கதான் கவனிக்கறாங்க!”
விஜயகாந்த்துடனான அரசியல், சினிமா அனுபவங்கள் இன்னும் பல விஷயங்களை இந்த வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார் அருண்பாண்டியன்..