அஜித்துடன் நடிகர் அம்பானி சங்கர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் திடீரென வைரலாகியது. ‘அஜித்-61’க்கான லுக்கில் அவர் இருந்ததாலும் with ji after ji என நடிகர் சங்கர் குறிப்பிட்டிருந்ததாலும் இது படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்கும் என்ற பேச்சும் எழுந்தது.
வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்டவர் சங்கர். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் சாம்ஸ் ஓட்டி வரும் பைக்கின் முன் ஒரு பையன் விழுவான். அதை வைத்து வடிவேலு பஞ்சாயத்து செய்வார். அந்த பையன்தான் இந்த சங்கர். அதன் பிறகு கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்திலிருந்து ‘அம்பானி’ சங்கரனார். கடந்த பல வருடங்களாக சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்ததினால், அவரது காமெடி டீமில் உள்ள பலர் வாய்ப்பிழந்தனர். அப்போது, தனது ரூட்டை மாற்றியவர் சங்கர். விதவிதமான காமெடி கான்சப்ட்களை பிடித்து `Thirsty crow’ என்ற பெயரில் யூடியூப்பில் ஸ்கிரிப்ட்களாக குவித்து லைக்குகளை அள்ளிக்கொண்டிருந்தார். சங்கரது டீம் உருவாக்கிய குறும்படம் ஒன்று, நைஜீரிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றி சங்கரிடம் கேட்டேன்.
”இந்தப் படம் வெளியானதும் நான் அவரோட படத்துல நடிக்கறேன்னு நினைச்சு, வாழ்த்துக்கள் குவிய ஆரம்பிச்சிடுச்சு. அஜித் சார் படத்துல நான் நடிக்கல. அவரோட ‘ஜி’ படத்துல நடிச்சிருந்தேன். அதன்பிறகு கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கு பிறகு அவரை சந்திக்கற வாய்ப்பு அமைஞ்சது. இந்தப் படம் சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தான் எடுத்தேன். சார் வீட்டு ஃபங்ஷன் அங்கே நடந்தது. நான் வேற ஒரு ஃபங்ஷனுக்காக அந்த ஹோட்டல் போயிந்த போதுதான், சாரை சந்திச்சேன். என்னை பார்த்ததும், ‘எப்படி இருக்கீங்க சங்கர்?”னு நலம் விசாரிச்சார். அதே அன்போட சார் பேசினார். சந்தோஷமான தருணமாகிடுச்சு.” என்கிறார் சங்கர்.