மும்பை,
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒருசில முறை மன்கட் முறையில் எதிர்முனையில் நின்றுகொண்டிருக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ததால், பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்ச்கர்களும் இவரை சாடினர்.
இந்த நிலையில்,மன்கட் முறையில் ‘ரன்-அவுட்’ செய்தால் அதை அதிகாரபூர்வ ரன்-அவுட்டாக எடுத்து கொள்ளும் வகையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்லது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘ என் சக பந்து வீச்சாளர்களே, தயது செய்து புரிந்து கொள்ளுங்கள். பவுலிங் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்னதாக ஒரு அடி நகர்ந்தாலும் அதுவே உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்டு விடலாம். அதாவது அவர் கூடுதலாக நகர்ந்து செல்வதன் மூலம் மறுமுனைக்கு செல்லும் வாய்ப்பை பெற்று அடுத்த பந்தில் சிக்சரும் விளாசினால் அது உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே பந்து வீசுவற்கு முன்பே பவுலிங் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் தயக்கமின்றி ‘ரன்-அவுட்’ செய்ய வேண்டும் என்பதே எனது கருத்தாகும்’ இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.