காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா போதையில் 70 வயது மூதாட்டியையும் அவரது 5 வயது பேரனையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுநூல் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்று கூறப்படும் நிலையில் தினசரி போதையில் அப்பகுதியினரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கஞ்சா போதையில் இருந்த யுவராஜ், பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்த வேளாங்கண்ணி என்ற மூதாட்டியை தரதரவென வீட்டுக்குள் இழுத்துச் சென்று அரிவாளால் வெட்டியிருக்கிறான்.
அந்த நேரம் அங்கு வந்த மூதாட்டியின் 5 வயது பேரனையும் அரிவாளால் வெட்டியவன், கதவை வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். மூதாட்டியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.