கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடன் உதவி: அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா வழங்குகிறது

புதுடெல்லி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி அமெரிக்க டாலர்) கடன் உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. உணவு, மருந்து மற்றும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா கால நெருக்கடியால் இலங்கை கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்தது. பிற நாட்டு கரன்சிக்கு இணையான இலங்கை கரன்சியின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை நிதி அமைச்சர் பாசில் ராஜபக்ச, 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்து மோடியிடம் பாசில் ராஜபக்ச விளக்கினார். மேலும், இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துவரும் இந்தியாவுக்கு இலங்கை அரசு சார்பில் நன்றி தெரிவித்தார். அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக் கடியை சமாளிக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்டை நாடான இலங்கையின் நலனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நட்பு நாடான இலங்கை மக்களின் நலனில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் புத்த சமயம் மற்றும் ராமாயண சுற்றுலாவுக்கு இரு நாடுகளிடையே வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் பாசில் ராஜபக்ச நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இலங்கைக்கு இந்தியா கடன் உதவி அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது இருதரப்புக்கும் பயன்தரும் வகையில் பல்வேறு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேற் கொள் ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு அந்நாட்டுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. அதற்காக அந்நாட்டுக்கு ரூ.7,500 கோடி (100 கோடி அமெரிக்க டாலர்) கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடனுதவிக்கான ஒப்பந்தம், டெல்லியில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ), இலங்கை அரசும் கையெழுத் திட்டுள்ளன.

ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை யில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் முன்னுரிமை அளித்து கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் விதமாக 50 கோடி அமெரிக்க டாலரை இந்தியா வழங்கியுள்ளது. இதன்மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 90 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய அளித்துள்ள கடன் உதவியை திரும்பச் செலுத்துவதற்கு இலங்கைக்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியானது, ஆசிய ஒப்புகை தீர்ப்பாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்டை நாடு களின் நலன் குறித்த இந்தியாவின் அக்கறை காரணமாக இலங்கைக்கு 100 கோடி டாலர் கடன் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இத் தொகைக்கு ஈடாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.