காங்கிரஸ் கட்சிக்கு கூட்டுத் தலைமையா?.. ஒற்றைத் தலைமையா?.. பரபரப்பு தகவல்கள்

டெல்லி: கட்சிக்கு கூட்டு தலைமை வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 24 மணி நேரத்தில் 2 முறை நடைபெற்றதால் டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இது குறித்து விவாதிப்பதற்காக கூடிய காங்கிரஸ் செயற்குழு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ராஜினாமா செய்ய முன்வந்ததை நிராகரித்தது. இந்நிலையில் ஜி 23 என அழைக்கப்படும் தலைவர்கள், குலாம் நபி ஆசாத் தலைமையில் தனியாக கூடி தேர்தல் தோல்வி குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில் புதிதாக சில காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் அதிருப்தி தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில்; காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு தலைமை வேண்டும் என வலியுறுத்தினர். அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் பேசிய பிறகு குலாம் நபி ஆசாத் வீட்டிற்கு சென்று அவரையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க சோனியா காந்தி தயாராக உள்ளார் என்றார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது என அவர் கூறினார். இதனிடையே காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத் வீட்டில் 2வது முறையாக நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பூபேந்தர் சிங் ஹூடா பங்கேற்றார். ராகுல் காந்தியை சந்தித்தது பற்றியும் அவரின் கருத்துக்கள் பற்றியும் ஹூடா தலைவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி ஒப்புதல் அளித்ததும் அவரை சந்தித்து கட்சியில் உள்ள பிரச்சனைகள் பற்றி முறையிட அதிருப்தி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.