சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தோ்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார்.
காங்கிரஸ் கட்சிக்குள் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கையை கட்சியின் தலைமை எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி-23 காங்கிரஸ் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகியிருக்க வேண்டும் என்று ஜி 23 குழுவைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு, கட்சியில் சரியான சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள், கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதினர். அதில், காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றவர்களைச் சந்தித்து மீண்டும் அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். அதை, காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை.
கடந்த ஆண்டு டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கபில் சிபல், காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார். “தற்போது காங்கிரஸ் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. அங்கு யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பாரம்பர்யமிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ச்சியாக பல தலைவர்கள் வெளியேறிவருகின்றனர். அது நம் தவறாகவும் இருக்கலாம்” என்றார் கபில் சிபல்.
மேலும் அவர், “எங்களைப் போன்றவர்கள் அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு செல்பவர்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டிக்கொண்டு இருக்க மாட்டோம். கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்போம். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும். அப்போதுதான் எல்லாவற்றையும் கலந்தாலோசிக்க முடியும்” என்று கபில் சிபல் கூறினார்.
அதே கபில் சிபல்தான், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும் என்று தற்போது கூறியிருக்கிறார். இந்த அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார்கள். இந்த உள்குத்து யுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவரான கோபண்ணா முன்பாக வைத்தோம்.
“சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 57 பேரில் 54 பேர் கலந்துகொண்டனர். அந்த 54 பேரில், ஜி 23-யில் இருக்கும் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் 3 பேரும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமை மீது முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, குலாம்நபி ஆசாத் வீட்டில் ஜி 23 குழுவைச் சேர்ந்தவர்கள் கூடிப் பேசியுள்ளனர். கூட்டுத்தலைமை வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எந்த கருத்தையும் செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டியவர்கள், தனியாக ஒரு கூட்டம் போட்டு கருத்து தெரிவிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.
பொதுவெளியிலும் ஊடகங்கள் வாயிலாகவும் இப்படிப்பட்ட கருத்துக்களை அவர்கள் தெரிவிப்பது, பா.ஜ.க-வுக்கு அவர்கள் உதவிசெய்வதாகவே கருதப்படும். காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டிருக்கும் காலத்தில், அதை எப்படி வலிமைப்படுத்துவது, 2024-ல் மோடி ஆட்சியை எப்படி அகற்றுவது, அதற்கு காங்கிரஸ் தலைமைக்கு எப்படி உதவுவது என்பதுதான் இன்றைய பிரச்னை. சோனியா காந்தி, ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, கட்சியின் வளர்ச்சிக்குத்தான் அவர்கள் பயன்பட்டுள்ளனர். எந்த அரசுப் பதவியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
2004-ல் ஐ.மு.கூட்டணி அரசு அமைந்தபோது, இந்த ஜி 23 குழுவில் இருக்கும் பெரும்பாலானோர் மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள். பதவி சுகத்தை அனுபவித்தவர்கள். ஆனால், சோனியா காந்தி பிரதமர் பதவியை மறுத்தவர். ராகுல் காந்தி அமைச்சர் பதவியை மறுத்தவர். ஜனநாயகப்பூர்வமாக இயங்கும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குரல்கள் ஒலிக்கும். எல்லோரும் கருத்துப் பரிமாற்றம் செய்து, பின்னர் கருத்தொற்றுமை ஏற்பட்டு, அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் காங்கிரஸ் தலைமை.
இந்தியாவையும் நேரு பாரம்பர்யத்தையும் இந்திய மக்களுடன் இருக்கும் பிணைப்பை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. காங்கிரஸை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை குறிவைத்துத் தாக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, ராகுல் காந்தியை பலவீனப்படுத்திவிட்டால், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்கிற பா.ஜ.க-வின் லட்சியத்தை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது. காங்கிரஸ் கட்சியில் சில துரோகிகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இவர்கள் வரம்புமீறிச் சென்றால், அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் கோபண்ணா.