குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வகானி தெரிவித்துள்ளார்.
பகவத் கீதையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடையே அது குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை அறநெறி அறிவியல் பாடத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை தயாராகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு அறநெறி பாடத்தின் கீழ் பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.
நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதால் குழந்தைகளின் பாடத்திட்டத்தில் அறநெறி அறிவியலை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும்போது அறநெறி அறிவியல் வகுப்புகள் வாரம் ஒருமுறை நடத்தப்பட்டன. வரும் நாட்களில் மாநில பாடத்திட்டத்தில் இதை ஏற்க முடியுமா என பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கேரளாவில் கே ரெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு- கோட்டயம் மாவட்டத்தில் இன்று கடை அடைப்பு