‘குதிரைவால்’ விமர்சனம்: உலக சினிமா எடுங்கள்! ஆனால், நம்ம ஆடியன்ஸ் புரிந்துகொள்ள வேண்டாமா?

பா. ரஞ்சித் இயக்கும்… தயாரிக்கும் படங்கள் என்றாலே பல குறியீடுகள் இருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் அழகு நிறைந்த வாழ்வியல், அதற்குள் புதைந்திருக்கும் ஆழமான அரசியல்கள் என இதுவரை சொல்லப்படாத, பேசப்படாத பல புதிய உண்மைத் தகவல்கள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உண்டு. அத்தனை எதிர்பார்ப்புகளுடனேயே பா. ரஞ்சித் யாழி ஃபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்துள்ள ‘குதிரைவால்’ இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

’தூக்கத்திலிருந்து விழிக்கும் ஒருவன், திடீரென்று தனக்கு குதிரையின் வால் முளைத்திருப்பதாக உணர்ந்தால் எப்படி இருக்கும்?’ படிக்கும்போதே படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கிறதல்லவா? அந்த ஆர்வத்தை இறுதிவரை பூர்த்தி செய்ததா ’குதிரைவால்?’.

பேச்சிலர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், சென்னை தி. நகரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் தனியாக தங்கியிருக்கிறார். ஆனால், அந்த அறையில் அவர் மட்டுமே தங்கியிருக்கிறார் என்றும் சொல்லிவிடமுடியாது. அவரைத்தவிர்த்து மனிதர்கள் அல்லாத வேறு சிலரும் தங்கியிருக்கிறார்கள். அப்படியென்றால், இது பேய் படமாக இருக்குமோ என்று பீதியாகிவிடவேண்டாம். அவரைத்தாண்டி, அவரது அறையில் வேறு யாரெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்பதை படம் பார்ப்பவர்களுக்கு ஒரு காட்சியில் சொல்லப்படும்.

சரி, கதைக்கு வருவோம். தூக்கத்திலிருந்து கண் விழிக்கிறார் கலையரசன். திடீரென்று வால் முளைத்ததாக உணர்கிறார். அதுவும், குதிரைவால். குதிரையின் வால் எப்படி குதிரைக்கு பின்னால் இருந்துகொண்டு டப் டப் என்று அடித்துக்கொண்டிருக்குமோ, அதேபோல் தனக்கு பின்னால் இருக்கும் வாலும் கொசு அடிப்பதுபோல் அடித்து விரட்டுவதாக காண்பிக்கப்படுகிறது. வால் இருப்பதைப் பார்த்துவிட்டால், மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள் என்ற பயமும் பதட்டமும் கலையரசனுக்கு தொற்றிக்கொள்கிறது. அதேநேரத்தில், வால் இருப்பது தனக்கு மட்டும்தான் தெரிகிறதா? மற்றவர்களுக்கும் தெரிகிறதா? என்றக் குழப்பத்துடன் நடக்கிறார். ஒரு பள்ளிச்சிறுவனும் அவனது அம்மாவும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டுப்போக, வால் இருப்பது மற்றவர்களுக்கு தெரிகிறது என்று நினைத்து உள்ளே சுருட்டி வைக்கிறார். பொது இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கிறார். வீட்டில் தண்ணீர் குழாய் மூடிவிட்டு வந்துவிட்டோமா என்று குழம்பி அலுவலகத்திலிருந்து ஓடிவருகிறார். இப்படிப்பட்ட, குழப்பமான மனநிலையால் வங்கிப் பணியையும் இழக்கிறார். அதேநேரத்தில், தனது பிரச்சனைக்கான, கனவுக்கான விடையையும் தேடி அலைகிறார்.

அதற்காக, சைக்யாட்ரிஸ்டிடம் (மனநல மருத்துவர்) செல்லப்போவதில்லை என்று முடிவெடுத்துவிடும் கலையரசன்… பேய் படங்களில் ஃப்ளாஷ்பேக்கை சொல்லி பீதி கிளப்புவதற்காகவே மினி உரலில் வெற்றிலையை இடித்துக்கொண்டு பல படங்களில் உட்கார்ந்திருப்பார்களே அப்படியொரு பாட்டியிடம் செல்கிறார். அதற்குப்பிறகு, ஆறுமாதம் மட்டுமே பள்ளியில் வேலை பார்த்த தனது கணித ஆசிரியர், ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடலைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் டிவி பிரபல ஜோதிடர் என ஒவ்வொருவரகாக தேடிச்சென்று பேசுகிறார். அவரது தேடலுக்காக விடை கிடைத்ததா என்பதுதான் மீதிக்கதை.

image

நடிப்பு ரேஸில் கலையரசனின் ஓட்டம் செம்ம. ஆனால், ரேஸில் அவர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறார். அதுவும், வால் நெளிந்துகொண்டே இருப்பதுபோன்று உணர்வதால், வழக்கம்போல நடக்கமுடியாமல் கலையரசனும் ஷாக் அண்ட் ஷேக் ஆகி நெளிந்து நெளிந்தே நடக்கிறார். குதிரையைப்போலவே அவர் செய்யும் ‘மேன’ ரிஸம் ம்ஹூம் ‘குதிரை’யிஸம் ரொம்பவே ரசிக்கவைக்கிறது. உளவியல் சிக்கலில் தவிக்கும் அவரது முக பாவனைகள், வால் இல்லாத குதிரையைப்பார்த்து எம்.ஜி.ஆர் குரலில் காரணம் கேட்பது என தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் கலையரசன்.

இமேஜ் ரிஃப்லெஷன்போல அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ’உனக்குள்ள ஒரு பொண்ணு இருக்கா. அவ உனக்கு ஞாபகப்படுத்துறா’ என்கிற ‘நீலி’யின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மயிலிறகாய் வருடுகின்றன. கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் பாட்டி, அவர் சொல்லும் சின்ன சின்னக் கதைகள் உண்மையிலேயே பிரிமிக்க வைத்து உண்மை வரலாற்றை தேட வைக்கின்றன. “டார்வின் தியரிப்படி குரங்கிலிருந்து மனுஷன் வந்தான். கை கால் வந்துடுச்சி. வால் மட்டும் வரலியே… ஏன் வால் வரல? குழந்தைகளின் வாலை ஒட்ட நறுக்குவேன்னு சொல்றாங்களே ஏன்?”, “எண்கள் எதுல ஆரம்பிச்சது.. எதுல முடியுது?” இப்படி பல்வேறு கேள்விகளை கேட்டு நம்மை யோசிக்க வைக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராஜேஷும்.

ஃபேண்டசியான கதை, கலர்ஃபுல் காட்சிகள், புத்தர், இயேசு, மாதா, அரசமரம், பாட்டியின் கதை, என்னுடைய அடையாளத்தை சிதைக்க நினைக்கறீங்க.. ’சொந்த நாட்டுலே அகதியாக்கப் பார்க்கறீங்க’… போன்ற கலையரசன் பேசும் வசனங்கள் மூலம் முன்பு பெளத்த வரலாறாக இருந்த இந்தியா, ஆரியர்கள் வந்தபிறகு எப்படி மாறியது என்பதை நிகழ்கால பிரச்சனைகளோடு விளக்க முயற்சித்திருக்கிறார்கள். படத்தில் இப்படி ஏகப்பட்டக் குறியீடுகளும் வசனங்களும் குவிந்துள்ளன. ஆனால், ‘குதிரைவால்’ என்ற தலைப்புக்கேற்ப வேகமாக பயணிக்காமல் திரைக்கதையோ எருமை வாலை பிடித்ததுபோல் ஸ்லோவாக நகர்கிறது. படத்தில் வால் முளைத்ததாக உணரும் கலையரசன் நெளிவதைவிட பார்வையாளர்களை அதிகமாக நெளிய வைத்துவிடுகிறது. இண்டர் ‘வால்’ விடும்போதுகூட புலிவாலை பிடித்த கதையாக மீதிப்படத்தை பார்க்கவேண்டிய சூழல். படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தின் இவ்வளவு கொடூரமான கொலைக்கான வலுவான காரணத்தையும் நாமே ஆராய்ச்சி செய்துகொள்ளவேண்டும்போல.

image

அந்த ஜோசியக்காரர் கதாப்பாத்திரத்தை மட்டும் எஸ்.ஜே சூர்யாவுக்குக் கொடுத்திருந்தால் நகைச்சுவையால் தியேட்டரையே திணறவைத்திருப்பார் என்று தோன்றியது. கலையரசன், சேத்தன், கனவுக்கு விளக்கும் சொல்லும் பாட்டி, நினைவைத் தொலைத்துவிட்டு கனவைத்தேடி அலையும் அஞ்சலி பாட்டில், கலையரசனுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஃப்ளாஷ்பேக் சிறுமி நீலி என அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கதை மட்டும் குதிரை இல்லாத வால் போலவே நகர்கிறது.

பொதுவாகவே, கனவுகள் என்றால் புரியாது, ஒழுங்கற்று இருக்கும். விழித்துப் பார்த்தாலும் பெரும்பாலான கனவுகள் நினைவிலும் இருக்காது. சில நேரங்களில் நாம் ஆழ்மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது கனவில் வரும். சிக்மண்ட் பிராய்டு செய்த கனவின் ஆய்வுகளை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகனும் தன்னை பிராய்டு என்றே அறிமுகப்படுத்திக்கொள்கிறார். தமிழ் சினிமாவிற்கு மேஜிக்கல் ரியலிசம் ஜானர் வித்தியாசமானது, வரவேற்கக்கது, பாராட்டுக்குரியது. ’வால் நட் கேக்’ போன்று வரவேண்டிய படம். ஆனால், படத்தையும் கனவு மாதிரியே புரியாமல் சொதப்பி எடுத்ததுதான் பெரிய மைனஸ். படமும் கணித ஆசிரியரின் அறை முழுக்க எழுதப்பட்டிருக்கும் கணக்குகள்போல் புரியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் நினைவிலும் நிற்கவில்லை.

கனவுகளை பற்றிய தேடலுடன் பாட்டி, கணித ஆசிரியர், ஜோதிடர் என கலையரசன் தேடி சென்றதுபோல ரசிகர்களும் படத்தை தேடலுடன் இயக்குநர்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராஜேஷ், ஃப்ராய்டு புத்தகங்கள் என தேடிச்செல்ல வேண்டியிருக்கிறது.

படத்தின் பெரிய பலம் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவுவும் பிரதீப் குமாரின் பாடல்களும்தான். கனவுகளுக்கு ஏற்றார்போல் அறைக்குள்ளேயே கேமராவை வைத்து பல்வேறு கோணங்களில் சுழல விட்டிருக்கிறார் கார்த்திக் முத்துக்குமார். ஒவ்வொரு காட்சியும் வானவில்போல கண்களுக்கு வண்ண வண்ண கலர்களை காண்பித்து புத்துணர்வூட்டுகிறது. ’பறந்து போகின்றேன்’, ‘ஆராரோ ஆரிரரோ’ பாடல்களில் பிரதீப் குமார் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

image

உலக சினிமா தரத்தில் ஒரு தமிழ் சினிமாவை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள் இயக்குநர்கள். ஆனால், உலக சினிமாக்கள் ஃபிலிம் ஃபெஸ்டிவெல்களில் வெளியாகும் உலக சினிமாக்களைப்போல கலைத்துறையினர், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் மட்டுமே புரிந்துகொண்டால் போதுமா? பொதுவான பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா? என்கிற கேள்விகளுக்கும் ‘குதிரைவால்’ டீம் விடை கண்டுபிடிக்கவேண்டும்.

இயக்குநர் பா.ரஞ்சித் முதன் முதலில் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தலைப்பு குதிரையை மையப்படுத்தியது. அவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரைட்டர்’ படத்திலும் குதிரையில் ஏற உயரதிகாரியால் த(ஒ)டுக்கப்பட்ட பெண், குதிரையில் ஏறி அமர்ந்து கம்பீரமாக செல்லும் காட்சி பார்வையாளர்களை சிலிர்ப்பூட்டி ஆர்ப்பரிக்க வைத்தது. ஆனால், ‘குதிரைவால்’ படத்திலோ ஆண்மை, பெண்மை எனவும் முஸ்லி பவர் விளம்பரங்களையெல்லாம் சுட்டிக்காட்டி வேறு கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதில், தவறே இல்லை. ஆனால், தியேட்டருக்குள் நமக்கு ஒரு குதிரை கிடைத்தால் ஏறி அமர்ந்து தப்பி ஓடிவந்து விடலாமோ என்கிற அளவுக்கு, நமது பொறுமையை உளவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதுதான் தவறு.

– வினி சர்பனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.