கேரளாவில் கே ரெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு- கோட்டயம் மாவட்டத்தில் இன்று கடை அடைப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசே ரெயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கே ரெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில கிராம மக்களும் திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி பகுதியில் நேற்று கே ரெயில் திட்டத்திற்கு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த சென்றனர்.

இதற்கு அப்பகுதி காங்கிரசாரும், கிராம மக்களும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராம மக்கள் பலரை கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் நேற்றிரவு கிராம மக்கள் பலரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கிராம மக்களுக்கு ஆதரவாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சட்டசபை முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கோட்டயம் மாவட்டத்தில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கே ரெயில் திட்டத்தை நிறுத்த வேண்டும், நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், இதற்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதோடு, கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய கடை அடைப்பு போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. போராட்டத்தையொட்டி சங்கனாச்சேரி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.