சென்னை:
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் அமைப்பு” வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளைமேற்கொள்ள நிலஅளவையர்களுக்கு “ரோவர்” கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.
நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு, தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வானிலையைத் துல்லியமாகக் கணிக்க, “பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை” மேம்படுத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம்- ஒழுங்கைத் திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்,போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத்தடுப்பதற்கு இந்த அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றது. வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட,சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப்பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறானபிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்திட, “சமூகஊடக சிறப்பு மையம்” அமைக்கப்படும். இம்மதிப்பீடுகளில் காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.