பெங்களூரு-மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று அவரது நடிப்பில் ஜேம்ஸ் படம் ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி வெளியே வந்தனர்.மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீசானது.இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழா கோலம் போல காட்சி அளித்தது. படம் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கால் அழுதபடி பார்க்கும் ‘வீடியோ’ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கண்ணீருடன் வருவதையும் காண முடிந்தது. பாகல்கோட்டில் அவரது முகத்தை திரையில் பார்க்க முடியாமல் சில ரசிகர்கள் தியேட்டரை விட்டு பாதியில் வெளியில் வந்தனர். சில தியேட்டர்கள் முன் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.அவரது கட் – அவுட் மற்றும் பேனருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஹுப்பள்ளியை சேர்ந்த ரசிகரான ஒருவர், 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்தார்.சில இடங்களில், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.புனித் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில் ராகவேந்திரா ராஜ்குமார் ‘கேக்’ வெட்டினார். ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Advertisement