அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலா, கடந்த வாரம் திருச்செந்தூர் சென்றபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வாரம் தஞ்சாவூர் பயணத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா சந்திக்க உள்ள அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று அதிமுக கொதி நிலையில் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் தற்காலிகா பொதுச் செயலாளரான சசிகலா ஆட்சியைக் கைப்பற்ற முயன்றபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தால், தட்டிப்போனது, சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் முழுவதுமாகத் கைவிட்டுப்போனது. சசிகலா சிறை செல்வதற்கு முன்னாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் செய்தார். சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
சசிகலா சிறை சென்ற பின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உடன் இணைந்தார். சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கினார்.
சசிகலா தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையானதும், அதிமுகவைக் கைப்பற்ற தீவிரமாக களம் இறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனது பிடியை உறுதியாக வைத்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாகவோ அல்லது தனது தலைமையை விமர்சித்தோ கட்சியி யாராவது பேசினால் அவர்கள் மீது அதிமுக தலைமை என்ற முறையில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, சசிகலா அதிமுவை தோல்விகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என அதிமுக, அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் போனில் பேசிய ஆடியோக்கள் வெளியாக அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. சசிகலா உடன் போனில் பேசிய அதிமுக நிர்வாகிகள் மீது அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியைவிட்டு நீக்கினர்.
இருப்பினும், அதிமுகவை மீட்டெடுக்க அனைவரையும் ஒன்றிணைக்க சசிகலா அதிமுக தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்தார். ஆனால், சசிகலா எதிர்பார்த்தபடி, அதிமுகவின் பெரிய தலைவர்கள் யாரும் சசிகலாவை சந்திக்க வரவில்லை. ஆனால், கடந்த வாரம், சசிகலா திருச்செந்தூர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை சந்தித்துப் பேசினார். அவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், திருச்செந்தூர் பயணத்தின்போது, சசிகலா எதிர்பார்த்தபடி அதிமுகவில் முக்கிய தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை.
இந்த சூழலில்தான், சசிகலா அடுத்து தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சசிகலா செல்லும் வழியில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், மருவத்தூர் ஆதிபராசக்தி, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்கிறார்.
தஞ்சாவூர் செல்லும் சசிகலா, அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அதிமுகவில் சசிகலாவை சந்திக்கப் போகிற அந்த முக்கியத் தலைவர் யார் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவர் சசிகலாவை சந்திக்கப்போகிறார் என்ற தகவல் அதிமுகவை கொதி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. சசிகலாவை சந்திக்கும் முக்கியத் தலைவர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியானாலும், சசிகலா தஞ்சாவூர் போகும்போது அவரை சந்திக்க உள்ல அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று தெரிய வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“