தப்பியோடிய கைதிகள் – சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான எஸ்.எஸ்.ஐ உட்பட 6 காவலர்கள்!

நாகை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் 2 எஸ்.எஸ்.ஐ உட்பட 6 காவல்துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர்மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இது தவிர வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஏற்கெனவே தனசேகரன் மீது வழக்கு உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை கோர்ட்டில் நடந்து வருகிறது.
image
இந்த சூழ்நிலையில் தனசேகரனை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வேளாங்கண்ணி காவல்துறையினர் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர். தஞ்சையை அடுத்த வளம்பகுடியில் அருகே இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு காவலர்கள் சென்றபோது, வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட கைதி தனசேகரன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம் பிடித்தார். போலீஸார் ஊர்மக்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் தனசேகரனை தேடியும் கிடைக்கவில்லை.
image
இந்த நிலையில், நாகை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட வேளாங்கண்ணி காவலர்களான எஸ்.எஸ்.ஐ கலியமூர்த்தி, மணிகண்டன், விஜயகுமார், ஜகதலப்பிரதாபன் உட்பட நான்கு பேரையும் IG பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
image
மேலும், கடந்த 14ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாநிலம் வாஞ்சூரிலிருந்து பாப்பா கோவிலைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் இருவரும் சாராயம் கடத்தி வந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட ஹைவே பேட்ரோல் வாகனம் அவர்களை துரத்திச் சென்றது. அப்போது தெத்தி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து இருந்த ஹரிஹரன் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தார். இதில் ஹரிஹரனுக்கு தலையில் அடிபட்டது. சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் உயிரிழந்தார்.
image
இவ்விவகாரத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ லோகநாதன், ஓட்டுநர் பார்த்திபன் உள்ளிட்ட இருவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் 2 எஸ்.எஸை உட்பட 6 காவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.