சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவனின் இரு மகன்களை கடத்திய ரவுடிக்கும்பலை போலீசார் சுற்றிவளைத்துப்பிடித்தனர்.
சென்னையில் கஞ்சா, அபின், மெத்த பட்டமைன், கெட்டமைன், எல்.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு விதமான போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து இளைஞர்களின் புத்தியை கெடுப்பதால் போதை என்ற சாத்தானுக்கு அடிமைகளாகி கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போதை பொருள் கடத்தலுக்கு தடுத்து அழிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 8-ம் தேதி வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் , வண்ணார பேட்டையில் காதர்மொய்தீன், நாகூர் அனிபா , ஷேக்முகமது வெங்கடரெட்டி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போதை பொருள் கடத்தல் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ மெத்தபட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றியதோடு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திராவில் ரகசியமாக செயல்பட்டு வந்த போதை பொருள் தொழிற்சாலையையும் ஆந்திர போலீசாருடன் சேர்ந்து அழித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பது தெரியவந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவான அவனை போலீசார் தேடினர். இதில் ஜெயினுலாபுதீன் மனைவி அவரது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று மனைவியிடம் விசாரித்தனர்.
அப்போது, தனது கணவர் ஜெய்னுலாப்தீனிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இருக்கும் தகவல் தெரிந்த ரவுடி கும்பல் ஒன்று இரண்டு மகன்களையும் கடத்தி வைத்துக்கொண்டு, 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வருவதாக அவரது மனைவி போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து ஜெய்னுலாப்தீன் மனைவியை வைத்து கடத்தல்காரர்களிடம் பேச வைத்த போலீசார், 20 லட்சம் பணத்துடன் வருவதாக கூற வைத்தனர். டம்மி பண பையுடன் கடத்தல்காரர்கள் வரச்சொன்ன வியாசர்பாடி முல்லை நகர் பகுதிக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். பணத்தை பெற இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.
போலீசாரிடம் சிக்கிய மணலி ரஞ்சித், செங்குன்றம் சந்தோஷ் கொடுத்த தகவலின் பேரில், பாலமுருகன் என்பவனை கைது செய்த போலீசார் அவனது கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயினுலாப்தீன் மகன்களான ஜாகிர், அஜித் ஆகிய இருவரையும் மீட்டனர்.
விசாரணையில் தலைமறைவான கொடுங்கையூர் ரவுடி மூவேந்தர் தலைமையிலான கும்பல், சமூகத்தில் சட்டவிரோதமாக பணம் ஈட்டும் நபர்களை கண்டறிந்து அவர்களை மிரட்டியும், அவர்களது குழந்தைகளை கடத்தியும் பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்தது.
ஜெயினுலாப்தீன் சட்டவிரோதமாக போதை பொருள் கடத்துவதை கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்ட மூவேந்தர், அவர் போலீசுக்கு செல்ல மாட்டார் என்பதை அறிந்தே துணிச்சலாக இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட ஜெய்னுலாப்தீன் மகன்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமார் 10 கிலோ எடையுள்ள எஃப்டிரின்(Ephedrine) எனும் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது பல்வேறு போதைப் பொருட்களை பிரித்தெடுக்கும் மூலப் பொருள் எனவும், இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
எஃப்டிரினை வைத்து மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள்களை தயாரித்து மொத்தமாக சப்ளை செய்து வரும் ஜெயினுலாப்தீனுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகிப்பதால் அவனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்க தொடங்கிய போலீசாரிடம் சத்தமின்றி ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் ரவுடி கும்பல் சிக்கி உள்ளது குறிப்பிடதக்கது.