ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக செழுமையான 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மக்கள் பாவனைக்காக இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
திரு.சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைவாக இந்த திட்டத்தின் கீழான நடைபாதை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் சுமார் 300 மீற்றர் நீளமான இந்த நடைபாதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுமார் 18 மில்லியன் ரூபா செலவில் அமைப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எல்.ஜீ.லியனகே தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், முன்னால் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர், மற்றும் பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.