புதுடெல்லி: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80-களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரிக்கு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படும். ஒய்-பிரிவு பாதுகாப்பின் கீழ், அக்னிஹோத்ரிக்கு எட்டு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்படும், அதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் இருப்பார்கள்.
அவரது படம் வெளியான பிறகு இயக்குநருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்டதன் அடிப்படையில் ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. விவேக் அக்னிஹோத்ரி தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் வந்ததையடுத்து ட்விட்டரை பதிவுகளை நிறுத்தி வைத்தார்.