சென்னை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2022- 2023-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெற்றுவேட்டு ஆகும். 2021- 2022-ம் ஆண்டுடில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 175 கோடி ரூபாய் வாங்கி செலவு செய்து இருக்கிறார்கள்.
2022- 2023-ம் ஆண்டு வருகிற நடப்பாண்டில் சுமார் 1 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்குவதற்காக அறிவித்து இருக்கிறார்கள்.
2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து அகலும் போது முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கும் போது 1 லட்சம் கோடி கடனுடன் பொறுப்பு ஏற்றார். 2021-ம் ஆண்டு நாங்கள் கட்சியை விட்டு செல்லும் போது 4.8 லட்சம் கோடி கடன் இருந்தது.
அதாவது 3.8 லட்சம் கீழ் கடன் நடப்பில் இருந்தது. பெரும்பாலும் மூலதன செலவு செய்து இருந்தோம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால் அது இடம்பெறவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தது.
அதையும் சாக்கு போக்கு சொல்லி தள்ளி வைத்து உள்ளனர்.
பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படும் என தி.மு.க. அறிவித்தது. மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்தனர். டீசலுக்கு குறைக்கவில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.
மத்திய அரசு குறைத்ததை ஏற்று 25 மாநிலங்களிலும் அம்மாநில முதல்- மந்திரிகள் பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து உள்ளன. ஆனால் தமிழக அரசு இன்னும் குறைக்கவில்லை. உரம் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதுபற்றி மத்திய அரசிடம் எதுவும் கேட்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியின் போது கொரோனா தொற்று பரவி இருந்த காலகட்டம். தொழிற்சாலைகள் எதுவும் முழுமையாக இயங்கவில்லை. அரசுக்கு வருமான வருவாய் குறைந்தது.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. பத்திரப்பதிவு மூலமும் அதிக வருவாய் கிடைத்தது. போக்குவரத்து துறையின் வருவாய் அதிகரித்தது. இதனால் கடன் சுமை குறைந்து வருவாய் அதிகரித்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா தொற்றால் வருவாய் குறைந்ததால் கடன் சுமையும் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வருவாய் அதிகரித்த நிலையில் அதிக கடன் பெற்றனர்.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அரசின் பட்ஜெட் வார்த்தைகளாலும் தோரணங்களாக அலங்கரிக்கப்பட்ட வாய்ப்பேச்சும் தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… தேர்தல் தோல்விக்கு சோனியா மட்டுமே காரணம் இல்லை- ப.சிதம்பரம் பேட்டி