Government allots Rs 849 crores for conservation, climate change and forest : திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இயற்கை, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. மொத்தமாக இந்த பட்ஜெட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ. 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கிடப்பட்டது? விரிவான தகவல்கள் இங்கே.
மனித – வனவிலங்கு இடையூறுகள், பழங்குடி மக்களின் உரிமைகள், காடுகளின் பரப்பை விரிவாக்குதல் மற்றும் மேலும் பல முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கவும் தமிழ்நாடு வன ஆணையம் உருவாக்கப்படும் என்று இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப்பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மேலும் பல முக்கியத் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று இலண்டன் க்யூ பூங்கா (Kew Gardens) அமைப்புடன் சேர்ந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டு தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், மாநிலத்தை பசுமையாக மாற்றும் திட்டங்களுக்கு நிதி அளிக்கவும் தமிழக பசுமைக் காலநிலை மாற்ற நிதியம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வரையாடு பாதுகாப்புத் திட்டம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்ற “மாநில விலங்கு”, இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசு
ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த கிண்டி குழந்தைகள் பூங்காவை, ரூ. 20 கோடி செலவில், பறவைகள், விலங்குகள், வண்ணத்துப்பூச்சிகள், உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக மாற்றப்படும் என்றும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டுக்குள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சுற்றுசூழல் சுற்றுலாவை அதிகரிக்கும் விதமாக, கோயம்புத்தூரின் சேத்துமடை, திண்டுக்கல்லின் மன்னவனூர், தடியன் குடிசை, திருப்பத்தூரின் ஏலகிரி ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“