பாட்னா:பவுத்தம் குறித்து, கடந்த 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், கையெழுத்து பிரதிகளில் எழுதப்பட்ட உள்ளடக்கத்தை மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடந்து வருவதாக, பீஹார் அரசு தெரிவித்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கிறது.இந்த மாநிலத்தின் கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அலோக் ரஞ்சன், சட்டசபையில் நேற்று முன்தினம் கூறியதாவது:பீஹாரின் நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தில், 7 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், சமஸ்கிருத பண்டிதர்கள், பவுத்தம் குறித்து பல குறிப்புகளை கையெழுத்து பிரதிகளாக எழுதினர்.
கடந்த 12 மற்றும் 13ம் நுாற்றாண்டில், கில்ஜி படையெடுப்பின் போது, இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் தீக்கிரையாகின.அப்போது மீட்கப்பட்ட சில கையெழுத்து பிரதிகள், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.சுதந்திர போராட்ட வீரரான ராகுல் சங்கிருத்தியாயன், அதை மீட்டு, பீஹாருக்கு கொண்டு வந்தார்.அவை, பாட்னா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.அந்த கையெழுத்து பிரதிகளை, ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடந்து வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்குள், அவை வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement